Wednesday, April 8, 2020

இட்லி புராணம்...



 
                


இந்த இட்லி இருக்கிறதே சார் இட்லி, அதை இத்தனை விதமாக சாப்பிட முடியுமா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் நமக்கு ஏற்படும் வண்ணம் நம்மவர்கள் "உள்ளே இறக்கும்" நளினம் இருக்கிறதே...அதில் துவங்குகிறது ந‌ம் இட்லி புராணம்.


சிலர், இட்லிக்குள் தங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி இருக்கிறதா என்பது போல் சுரண்டிப் பார்ப்பார்கள். சிலர், இட்லியின் இரண்டு பக்கங்களையும் கண்ணாடியில் முகம் பார்ப்பது போல திருப்பிப் பார்ப்பார்கள். சிந்தனை சிகரங்கள் சில பேர் ஒரு துண்டு இட்லியை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டே பல நிமிடம் உரையாடுவார்கள். உரையாடல் உச்சத்தில் இருக்கும் பொழுது வாய் வரைக்கும் இட்லி வந்து வந்து போகும்.

எப்படி இன்று தனிக் கட்சி ஆட்சி என்பது ந‌ம் நாட்டில் சாத்தியமில்லையோ அது போல், சட்னி அல்லது சாம்பார் கூட்டணி இன்றி எந்த ஒரு தட்டிலும் இட்லி ஆட்சி செய்ய முடியாது. சிலர் இட்லியின் துண்டை சாம்பாரில் போட்டு அது மூழ்கும் வரை காத்திருப்பார்கள். அந்த இடைவெளியில் வாழ்க்கையை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து விடுவார்கள். சாம்பாரில் முக்கிய பின் சட்னியை லேசாக தொட்டு சாப்பிடுவதும், முதலில் சட்னியில் இட்டபின் சாம்பாரில் முக்குவதுமாய் இரு வேறு மனித பிரிவுகள் இட்லி சாப்பிடும் முறையை உலகில் நிர்வகிக்கின்றன.


முன்னரெல்லாம் "பார்சல்" இட்லியை இலையில் வைத்து பேப்பரில்தான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேல் இலையை நீக்கினால் அடி இலையில் நசுக்கப்பட்ட சட்னியின் தரிசனம் கிடைக்கும். அந்த இலை நீக்கும் நொடி அற்புதமானது. சட்னி மெல்ல மெல்ல காட்சி கொடுக்கும் பொழுது, அளவு சரியாக இருக்கிறதா, குறைவாக வைத்து விட்டாரா என்று சராசரி உலகில் விடப்பட்ட நம் மேன்மைமிகு ஆன்மா பரிதவிக்கும் நொடி அது.

இவ்வாறு பேப்பரில் இட்லி பார்சல் வாங்கும் பொழுது, சாம்பாருக்கு தூக்கு வைத்திருக்கிறீர்களா என்று பார்சல் போடுபவர் கேட்பார். இரண்டு இட்லி பார்சல் சொல்லி விட்டு குடம் சைஸில் இருக்கும் தூக்கை நீட்டும் புத்திசாலிகள் நம்மில் பலர் இருந்தார்கள். ஒட்டல்காரரோ, "நான் எத்தனுக்கு எத்தன்டா" என்பது போல் ஒரு நக்கல் சிரிப்புடன், தற்போது அணைகளில் இருக்கும் நீர் அளவு போல் பெரிய தூக்கின் அடியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரிவது போல் சாம்பார் ஊற்றித் தருவார். "இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க" என்று சொல்லாத வாய் தமிழ் நாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இப்பொழுதோ, எந்த பேச்சுவார்த்தைக்கும் வழியின்றி plastic கவரில் மெளனமாகி கிடக்கிறது சாம்பார்.

இப்படி ஊரெங்கும் உலா வரும் இட்லி, சில வருடங்களாக மினி இட்லி அவதாரமும் பல ஓட்டல்களில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவுக்குச் சொல்லி விட்டு காத்திருந்த போது விலைப் பட்டியல் கண்ணில் விழுந்தது. அதில் மினி இட்லி
(3cm) என்று bracket போட்டிருந்தார்கள். நான் கணிதம் பயின்றவன் என்ற கர்வம் ஏற்படும் வண்ணம் மூளை ஒரு கேள்வி எழுப்பியது ‍ இட்லியோ வட்ட வடிவம். 3cm என்பது அதன் diameter or radius? அதை விட, இவ்வாறு இட்லியின் அளவை எழுத வைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒரு நிமிடம் ஓட்டலில் அனைவரும் scale உதவியுடன் இட்லியை அளந்து அளந்து சாப்பிடுவது போல் காட்சி மனதில் தோன்ற, பதறியபடி கனவையும் கணிதத்தையும் விரட்டினேன்.

நான் இட்லி சாப்பிடும் பாணியே தனி,சட்னி சாம்பார் என்றால் இட்லிகளை (முதலில் மூன்று,அப்புறம் இரண்டு) சாம்பாரை ஒரு நான்கு கரண்டி எடுத்து இட்லிகளின் தலை மேல் அபிஷேகம் செய்து,பக்கத்தில் தேங்காய் சட்னி வைத்து,இட்லியை விண்டு அபிஷேகம் செய்த சாம்பாரில் நன்றாக புரட்டி எடுத்து திரும்ப கிட்னியில் புரட்டி,இரண்டும் நீக்கமற கலந்து உள்ளே தள்ளுவேன்.

நெய் இருந்தால் சூடான இட்லிமேல் விரலால் அழுத்தி பல பள்ளங்களை உருவாக்கி (விரல் சுடும்தான்) அதில் முதலில் நெய்யை கீழே வழியாத அளவு விட்டு, இட்லி பொடியை ஒரு ரெண்டு மில்லி மீட்டர் உயரத்துக்கு சமமாக பரப்பி,அதன்மேல் திரும்பவும் நெய் விட்டு குழைத்து,முதலில் சுற்றி உள்ள (சரியாக இட்லி பொடி படாத இடங்கள்) ஏரியாவை காலி  பண்ணிவிட்டு அப்புறம் நடு ஏரியவுக்கு வரணும். அப்பப்பா,அந்த சுவை..... (சுவை மாற்ற,பெருங்காய இட்லி பொடி, பூண்டு இட்லிப்பொடி, எள்ளு இட்லிப்பொடி இப்படி பல ஐட்டம் இருக்கிறது).

 


அப்புறம் இன்னொரு ஐட்டம், இது எங்க வீட்டு ஸ்பெஷல் 'உப்புமிளகு' என்று எங்க பாட்டி ரெசிபி (முதலில் மிளகு வத்தல் உப்பு போட்டு நன்றாக தண்ணிவிடாம அரைத்து விட்டு,அதனுடன் தேங்காய்த்துருவல் பூண்டு சேர்த்து நன்கு அரையாமல் எடுக்கணும்) அதில் தேங்காய் எண்ணெய் விட்டு குழப்பி,இட்லியை தொட்டு சாப்பிடணும், பாதி சொர்கம் தெரியும்.  



"என்னப்பா நீ? பதிவில் எப்போதும் "கருத்து" சொல்வாய். இட்லி புராணத்தில் punch message இல்லையா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இட்லி வைத்தே ஒரு பஞ்ச் மெசேஜ் ரெடி பண்ணி விடலாம்...

இந்த இட்லியை பாருங்கள்...சாதி, மதம் என்று வேறுபட்டு அடித்துக் கொள்ளும் சமூகத்தில் இட்லியை தீண்டாதவர்கள் உண்டா? அமைதியின் வண்ணமான வெள்ளை நிறத்துடன் சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இருக்கிறதே சார் இட்லி. வர்க்க பேதத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடங்காய்ச்சிகள் "அக்கா கடை இட்லி" சாப்பிடுகிறார்கள். "rich" மக்கள் நட்சத்திர ஓட்டலில் "rice cake" சாப்பிடுகிறார்கள். உள்ளே போவது என்னமோ அரிசியும் உளுந்தும் தான். நடுத்தர வர்க்கமோ, தாங்கள் பிசாக்களுடன் பிறந்து பர்கர்களிலேயே வளர்ந்தது போல பாவனை காட்டினாலும், அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் துரத்தி, இப்போது pizza கடைகளிலும்  coffee day உள்ளேயும் புகுந்து, நீக்கமற நிறைந்து தன் ஆளுமையை பறைசாற்றி கொண்டிருக்கிறதே சார் நம் இட்லி! நம்மூரில் யார் யாரோ "சமூக நீதி காவலர்" பட்டத்துடன் உலா வருகிறார்கள். இட்லிக்கு அந்தத் தகுதி இல்லையா சார்? நீங்களே சொல்லுங்கள்...

2 comments:

Unknown said...

Ippove enakku idly theenganum pola erukku ......

ganesh said...

அருமை👌நானும் சமூக நீதி காவலர் கட்சி தான். தோசைய கூட இட்லி மாதிரி மடிச்சி தான் சாப்பிடுவேன்னா பாத்துக்கோங்களேன்...