Wednesday, November 20, 2019

எழுத மறந்த கதை - பாடலும் கூடலும்



அலுவலக வேலைகளை இலகுவாக்கவும் புதிய கற்பனை உற்டெடுக்கவும் (என் எல்லா பயோ கிளைமாட்டிக் ஆர்கிடெக்ச்சர் பிளான்கள் அவர் பாடல்கள் கேட்டு உருவானவையே) அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை, அடிக்கரும்பின் சுவை பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை... 


ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில்  தட்டி நிற்கும்.




ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை 'இன்னொரு வாட்டி போடுஙக' மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு, இளையராஜாவா ? என்றுகேட்டான்  வட இந்திய நண்பன்.நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.


"இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது.


நான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல , வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார்.  "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" பாட்டிலே  சலீல்தா சாயல் நிறைய இருக்கு, சலீல்தா பாட்டுக்களை கேட்டவர்களுக்கு தெரியும்.


தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி, களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?


நான் டிரைவரை நீண்ட தூரம் போகும் போது அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருப்பேன் . ஒரு முறை அவர், "இளையராஜா பாடல்கள்  நிறைய வச்சிருக்கீறீங்களே  சார். போயிட்டே இருக்கலாம்" என்றார்.


போயிட்டே இருக்கலாம்...


ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் கவுண்ட்டர்பாயிண்ட்க‌ள்?


என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு கவுண்ட்டர்பாயிண்ட் புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா?


இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும்.