Friday, July 26, 2019

கேட்ட பாடல் 1





அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் தூர்தர்சன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது.  அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.


இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு அல்லது மூன்று  ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.


https://www.youtube.com/watch?v=gthNl5fhbzU