Monday, January 13, 2020

எழுத மறந்த கதை. பாடலும் கூடலும் 2




நம்மில் சிலருக்கு மட்டுமே சிறப்பான உணவை சமைக்க தெரியும். ஆனால் நிறைய பேருக்கு சிறப்பான உணவை ரசித்து உண்ணத்தெரியும். அதுபோல, சிறப்பான பாடலை தயாரிக்க ராகம்தாளம் போன்ற நுட்பமான ஞானம் வேண்டியிருப்பினும் அப்பாடல்களை ரசித்து உண்ண அதை உள்வாங்கி அனுபவிக்கும் உணர்வு போதும்,அந்த உணர்வின் அடிப்படையில் ஆனது இந்த பதிவு.


இன்றைய அர்த்தமின்மை நேற்றைய அர்த்தத்தை இன்னும் ஆழமாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்றைய சத்தமிக்க அர்த்தமற்ற பாடல்கள் அன்றைய பாடல்களின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட உதவுகிறது.

இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளப்படும் பாடல்கள் மூலம் நீங்கள் தங்கிய ஏதோ ஒரு காலத்தை நீங்களே நினைவில் மீட்டெடுக்க முடியுமானால் அதுவே எனது வெற்றி.

பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் (''அமுதே தமிழே" /   Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981) துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"
அமுதே தமிழே பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"
வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.


சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  நம்மை ஒரு சோக கரைசலில் முக்கி எடுப்பதை உணர்தேன்.

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?







அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2)
சுகம் பல தரும் தமிழ்ப் பா (2)
சுவையொடு கவிதைகள் தா (2)
தமிழே நாளும் நீபாடு (2)
{அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா} தமிழே நாளும் நீபாடு
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊண்மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் (2) பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணம் ஏது
என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே




நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?



அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு "கனம்" தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்  வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...

மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?


https://www.youtube.com/watch?v=9qWasKLfLB0   (3 Versions Of Oorellam Un Paattuthaan)



Wednesday, November 20, 2019

எழுத மறந்த கதை - பாடலும் கூடலும்



அலுவலக வேலைகளை இலகுவாக்கவும் புதிய கற்பனை உற்டெடுக்கவும் (என் எல்லா பயோ கிளைமாட்டிக் ஆர்கிடெக்ச்சர் பிளான்கள் அவர் பாடல்கள் கேட்டு உருவானவையே) அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை, அடிக்கரும்பின் சுவை பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை... 


ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில்  தட்டி நிற்கும்.




ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை 'இன்னொரு வாட்டி போடுஙக' மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு, இளையராஜாவா ? என்றுகேட்டான்  வட இந்திய நண்பன்.நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.


"இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது.


நான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல , வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார்.  "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" பாட்டிலே  சலீல்தா சாயல் நிறைய இருக்கு, சலீல்தா பாட்டுக்களை கேட்டவர்களுக்கு தெரியும்.


தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி, களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?


நான் டிரைவரை நீண்ட தூரம் போகும் போது அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருப்பேன் . ஒரு முறை அவர், "இளையராஜா பாடல்கள்  நிறைய வச்சிருக்கீறீங்களே  சார். போயிட்டே இருக்கலாம்" என்றார்.


போயிட்டே இருக்கலாம்...


ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் கவுண்ட்டர்பாயிண்ட்க‌ள்?


என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு கவுண்ட்டர்பாயிண்ட் புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா?


இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும்.